Saturday, September 20, 2014

பாலியல் வன்முறைப் புகார்களின் மீது ஓர் ஊடு பார்வை

(நம் வலைப்பூ செயல்படாமல் பலகாலம் உறைந்து கிடந்தது. முன்னம் செயல்பட்ட காலத்தில் வரைவாக எழுதிவைத்து வெளியிடாமல் இருந்த கட்டுரை இது)

பல
இடங்களில் பாலியல் வன்முறைகள் நடக்கின்றன. சில இடங்களில் பாலியல் வன்முறை குறித்த குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இவ்விதம் குற்றம் சாட்டப்பட்டவர்களை முறையான விசாரணையாலும், நீதிபரிபாலன முறைகளாலும் எதிர்கொள்ளவேண்டும். ஆனால், தேர்ந்தெடுத்த வழக்குகளை மட்டும் பரபரப்புக்கு உள்ளாக்கி, ஊதிப் பெருக்கி தங்களுக்கான அரசியல் ஆயுதமாக மாற்றுகின்றன வலதுசாரி சக்திகள்.

       
 முற்போக்கு சக்திகளுக்கு இங்கே ஒரு தடுமாற்றம். நடந்திருப்பதாகக் கருதப்படும் குற்றத்தை எதிர்ப்பதா, அதனை அரசியல் ஆயுதமாக மாற்றும் வலதுசாரிகளின் முயற்சியை எதிர்ப்பதா என்று. இதில் என் நிலை: குற்றச்சாட்டு கேட்பாரில்லாமல் போகும் இடங்களில், புகார்தாரரின் குரல் கேட்கப்படுவதற்கு, முறைப்படி வழக்கு நடப்பதற்கு முற்போக்காளர்கள், பெண்ணியவாதிகள், பத்திரிகையாளர்கள் செயற்பாட்டாளர்கள் உதவலாம்.
       ஆனால், அரசியல் உள்நோக்கங்கள் அளவுக்கு அதிகமாக செயல்பட்டு குற்றம் சாட்டப்படுகிறவர் மிகையாக வேட்டையாடப்படும் இடங்களில், குற்றம் சாட்டப்படுகிறவர் தம் தரப்பு நியாயத்தை வாதிடுவதற்கான பாதுகாப்பான வெளியை உருவாக்குவதே முற்போக்காளர்கள், செயற்பாட்டாளர்கள், பெண்ணிய வாதிகளின் பணியாக இருக்கவேண்டும். அதிகார தாரதம்மியத்தில் பலம் குறைந்த பக்கத்தின் குரல் அநீதியான முறையில் நசுக்கப்படாமல் பாதுகாக்கவேண்டியதே நம் கடமை. இங்கே தருண் தேஜ்பாலுக்கு எதிராக செயல்படுவது புகார்தாரரான அந்தப் பெண்ணின் பலம் மட்டுமல்ல, மத அடிப்படை வாத அரசியல் அமைப்புகளும், மாநில அரசின் அதிகாரமும் அவருக்கு எதிராக மிருக பலத்தோடு செயல்படுகின்றன. குஜராத்திலும், கர்நாடகத்திலும் பெண்களின் மீது பாலியல் தாக்குதல் தொடுப்பதை கொள்கையாக செயல்படுத்தியவர்களின் அரசு, புகாரே தராத டெஹல்கா பெண் பத்திரிகையாளர் மீது லிஃப்டில் நடந்ததாக சாட்டப்படும் குற்றத்தை எதிர்த்து தீவிர நடவடிக்கை எடுக்கிறது. தேஜ்பால் வீடு தாக்கப்படுகிறது. 24 மணி நேரமும் ஊடகம் அவரைத் துரத்துகிறது. தேஜ்பாலும், டெஹல்காவின் மேலாண் ஆசிரியர் ஷோமா சௌத்ரியும் பொறுப்பில் இருந்து விலகுகிறார்கள். நடக்கட்டும்.

தருண் தேஜ்பாலை, டெஹல்காவை வேட்டையாடுவதன் மூலம், உண்மைகளைத் தெரிந்துகொள்வதற்கான பரந்துபட்ட மக்களின் உரிமையை வேட்டையாட இவர்கள் முனைகிறார்களே. இதனை எதிர்த்து யார் தீவிர நடவடிக்கை எடுப்பது?


   நடந்ததாக் சொல்லப்படும் குற்றத்தைக் குறித்துக் கூற, புகார் செய்ய விமர்சிக்க அந்தப் பெண்ணுக்கு, ஊடகங்களுக்கு, போலீசுக்கு மிதமிஞ்சிய வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. ஆனால், அதனை மறுக்க குற்றம் சாட்டப்பட்டவருக்கு வாய்ப்புகள் வழங்கப்படும் முன்பே அவரது தார்மீக வெளி முழுவதும் அடித்துச் சிதைக்கப்படுகிறது. இதெல்லாம் ஓர் எளிய பெண் பத்திரிகையாளரை முன்னிறுத்தி நடத்தப்படும் அரசியல் தாக்குதல் என்பது நமக்குப் புரிந்த பிறகும், அந்தத் தாக்குதலை எதிர்கொள்வதற்கான அரசியல் இல்லாமல் போகிறதா நம்மிடம்?

Wednesday, February 27, 2013

கிராஃபிக்ஸ் "போராளிகள்" பரப்பும் வன்மம்


நம் தமிழ்த் தேசியப் "போராளிகள்" கிராபிக்ஸ் கலையில் வல்லவர்கள் என்பது தெரியும். முடிந்தால் கிராபிக்ஸ் முறையிலேயே தனி ஈழம் பெற்றுத் தரும் அளவுக்கு அவர்களுக்குள் லட்சிய "வெறி" இருக்கிறது என்பதும் நாம் அறிந்ததே.

இன்று முகநூலில் அவர்களது கிராஃபிக்ஸ் ஒன்றைப் பார்த்தேன். அதில், ராஜபக்சே, பிரணாப் முகர்ஜி, மன்மோகன்சிங், சோனியா, கருணாநிதி ஆகியோர் தூக்குக் கயிற்றின் முன் நிற்கிறார்கள். அவர்களுக்கு மேலே உள்ள வாசகம் "ஐநா மன்றத்தையும், இந்திய வழக்காடு மன்றத்தையும்" அறைகூவி அழைத்து "குற்றவாளிகளைத் தண்டிப்பது எமக்கான தீர்வு அல்ல" என்று சொல்கிறது. கீழே உள்ள வாசகம் 120 கோடி இந்தியர்களை, புத்தர்-காந்தி தேசத்தை தலை குனிய வைத்தவர்களை தூக்கில் போடு என்று கோருகிறது. இதில்தான் இந்தியாவை நட்பாக்கிக்கொள்ளும் அவர்களின் ராஜதந்திரத்தை (!) நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். தமிழ்த் தேசியர்கள் தேர்ந்த ராஜதந்திரிகளும்கூட என்பது சொல்லியா தெரியவேண்டும்!

இவர்கள்தானே "மரண தண்டனையே கூடாது என்று தலைக்குப் பின்னே ஒளிவட்டத்தோடு வந்து பேசியவர்கள்" என்றெல்லாம் அதிர்ச்சியாகக் கூடாது. இன்னும் இருக்கிறது. இந்த அற்புதமான படத்துக்கு நீ...ண்ட குறிப்பும் உள்ளது. அதில் "21-ம் நூற்றாண்டின் மாபெரும் இனப்படுகொலையை" புரிந்தவர்களை இவர்கள் பட்டியலிட்டுள்ளார்கள். முதலில் வருகிறவர் கருணாநிதி. அவரது குடும்பத்தின் கடைசி சிசுவும்கூட தமிழ் இனத்துக்கு நஞ்சு என்கிறது அந்தக் குறிப்பு. பிறகு, படத்தில் தூக்குக் கயிற்றின் முன் நிற்கிற அனைவரைப் பற்றியும் வரிசையாகக் குறிப்பு. கடைசியில் வருகிறவர் ராஜபக்சே. இவர் சிங்கள மக்களுக்கு நேர்மையான அரசியல் தலைவர் என்ற "தகவலோடு" தொடங்குகிறது அவர் பற்றிய குறிப்பு. அரசியல் ஞானத்தில் இவர்களை மிஞ்ச யாரும் இல்லை என்பதைத் தனியாக நான் குறிப்பிடத் தேவையில்லை!

கடைசியாக அவர்களின் சட்ட அறிவும், வரலாற்று அறிவும் வெளிப்படுகிறது. ராஜபக்சேகூட பரவாயில்லை எப்படியாவது மீதி நாலு பேருக்கும் தூக்குத் தண்டனை கொடுத்துவிடு என்று "இந்திய வழக்காடு மன்றத்தை" கேட்கிறார்கள்.

//5000 ஆண்டுகால இந்திய நாட்டின் பாரம்பரிய பெருமையை, உலகின் மூத்த குடிகளான தமிழர்களை குழி தோண்டி புதைத்த இந்த நயவஞ்சகர்களை தண்டிக்க வேண்டும். இவர்களை தண்டிப்பதன் மூலம் இந்தியா புத்தர் பிறந்த காந்தி பிறந்த தேசம் என்றுமே அற நெறி தவறாது என்பதை உலகிற்கு உணர்த்த வேண்டும்// என்று கூறி முடிக்கிறார்கள். நீங்கள் படித்தது ஆர்.எஸ்.எஸ். பிரசுரமா என்று உங்களுக்கு சந்தேகம் வந்தால் உங்களையும் தூக்கில் ஏற்றிவிடுவார்கள். ஜாக்கிரதை.

சரி ஏன் இந்த மறை கழன்றவர்களைப் பற்றி மூச்சுப் பிடித்துக்கொண்டு விமர்சிக்கிறீர்கள் என்று கேட்பீர்களென்றால் உங்களுக்கு ஒரு அதிர்ச்சியான பதிலைச் சொல்கிறேன். இந்தப் பதிவு நான் பார்த்தவரையில் முகநூலில் 1,358 பேரால் ஷேர் செய்யப்பட்டிருந்தது.

Monday, February 25, 2013

டெசோ என்றால் எதிர்ப்பு; ஜெயா என்றால் ஆதரவு


கருணாநிதி: தனி ஈழம் என்பதை கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டவர். புலிகளையும், ஈழத்தையும் ஆதரித்ததால், அமைதிப்படையை எதிர்த்ததால், 1991-ல் இவர் தலைமையிலான திமுக அரசு கலைக்கப்பட்டது. 2009-ல் போர் நடந்த நேரத்தில் உறுதியான அரசியல் நிலை எடுக்கத் தவறியதுதான் இவர் மீதான குற்றச்சாட்டு.

ஜெயலலிதா: 2009 போர் நடந்த நேரத்தில் ஈழத் தமிழர் என்ற சொல்லே தவறு என்றும், இலங்கைத் தமிழர் என்றுதான் சொல்லவேண்டும் என்றும் குரல் எழுப்பியவர். போர் நடந்தால் சாவது சகஜம் என்றவர். விடுதலைப் புலிகளின் ஜென்ம வைரி. பிரபாகரனைக் கைது செய்யவேண்டும் என்று ஏற்கெனவே தீர்மானம் போட்டவர்.

ஈழத் தமிழர் பிரச்சினையில் இருவரும் தற்போது இருவேறு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

கருணாநிதி, "டெசோ" என்ற ஈழ ஆதரவாளர் அமைப்பை  ஏற்படுத்தி, ஈழ விடுதலை என்பதை கொள்கையாக அறிவித்து, அதற்கு ஆதரவாக இந்தியா முழுவதும் அரசியல் ஆதரவைத் திரட்டுகிறார். ஒரு இந்திய அரசியல் அமைப்பு என்ற முறையில் அதிகாரபூர்வமாக தமது நிலையை ஐ.நா.வில் தெரிவித்துள்ளார். தொடர் நடவடிக்கைகள், போராட்டத் திட்டங்கள் உண்டு.

ஜெயலலிதா இப்போதும்கூட, ஈழ விடுதலையை ஏற்பதாக பெயரளவில்கூட சொல்லவில்லை. உணர்ச்சி ஏற்றும், உசுப்பேற்றும் நடவடிக்கைகள் மூலம் மேம்போக்காக தாம், ஈழப் போராட்டத்துக்கு ஆதரவானவர் என்பது போன்ற பிம்பத்தை கட்டமைக்கிறார். உறுதியான அரசியல் திரட்டலோ, நடவடிக்கையோ ஏதுமில்லை. உலக அளவில் அரசியல் மக்களைப் பிரிக்கும்போதுகூட விளையாட்டும், பண்பாட்டுத் தொடர்புகளும் இணைக்கும் என்பார்கள். ஆனால், இலங்கை வீரர்கள் தமிழ்நாட்டில் வந்து விளையாடுவார்கள் என்பதால், ஆசிய விளையாட்டுப் போட்டியே தமிழ்நாட்டில் நடக்கக்கூடாது என்று முடிவெடுத்து, அதை வெளியே விரட்டியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. இவரது ஒரே "ஈழ ஆதரவு நடவடிக்கை" இதுதான்.

ஆனால், இன்று தமிழகத்தில் ஈழ ஆதரவாளர்கள் என்றும், தமிழத் தேசியர்கள் என்றும் அறியப்படுகிறவர்கள் கருணாநிதியின் "டெசோ" என்ற சொல்லைக் கேட்டாலே அறுத்துவிட்ட கோழியைப் போல குதிக்கிறார்கள். மொத்த இனப்படுகொலையையுமே செய்தவர் கருணாநிதிதான் என்று வசைபாடுகிறார்கள். கொதிக்கிறார்கள். ஆனால், இந்திய அளவில், எல்லா குறைபாடுகளுக்கும் மத்தியில் ஈழத்தை ஆதரிக்கும் ஒரே பெரிய அரசியல் கட்சி திமுக-தான் என்பதை மறைக்கிறார்கள்.

 பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்ட விதம் வெளியாகியுள்ள நிலையில், இலங்கையோடு நட்பு பாராட்டும் மத்திய அரசின் செயலை கண்டித்தார் கருணாநிதி. அடுத்து டெசோ அமைப்பு மூலம் இலங்கை தூதரக முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிப்பு  வெளியிட்டார். இந்த இரண்டுக்காகவும், "தமிழத் தேசியர்களிடம்" இணையத்தில் கருணாநிதி வாங்கிய வசைச் சொற்கள் கொஞ்சமல்ல.

ஆனால், இதே வாரத்தில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தத் தடைவிதித்த ஜெயலலிதாவின் கடந்த காலத்தை வைத்து இந்த தமிழத் தேசியப் "போராளிகள்" விமர்சிக்க மறந்தது மட்டுமல்ல. தலையில் வைத்துக் கொண்டாடுகிறார்கள். இதுதான் இன்றைய தமிழத் தேசியர்களின் உண்மை முகம். தமிழ்த் தேசியம் என்னும் புலித்தோலுக்குள் ஒளிந்திருப்பது இந்து தேசியம் என்னும் பசு. எச்சரிக்கை தமிழர்களே.

Thursday, September 6, 2012

தாக்குதல் மீதான தாக்குதல்: அதீத எதிர்வினையின் அரசியல்

இலங்கையில் நடந்தது மனிதகுலத்துக்கு எதிரான மிகப்பெரிய பயங்கரம். உலக வரலாற்றில் நடந்த இன ஒழிப்பு நடவடிக்கைகளில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க ஒன்று. அதற்கு எதிர்வினையாக தமிழகத்தில் நடந்துவரும் போராட்டங்கள் மிகச் சாதாரணமானவை. ஆனால், அவை இரண்டுவிதமான போக்குகளுக்கு இட்டுச் செல்கின்றன.

ஒருபுறம் நடந்த பயங்கரத்துக்கு நீதி கோருவது மற்றும் ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைக்கு வழிகோலுவது என்ற நோக்கத்தோடு செயல்படும் போக்கு. மறுபுறம், அதை வைத்து தமிழக அரசியலில் பாசிசப் போக்குகளை உருவாக்குவது, முதிர்ச்சியற்ற உணர்ச்சிவசப்பட்ட நடவடிக்கைகளை ஊக்குவிப்பது, குறுகிய கட்சி அரசியல் கணக்குகளை நோக்கமாகக் கொள்வது என்று செயல்படும் போக்கு. இரண்டாவதாக சொல்லப்பட்ட வழிகளில் அரசியல் நடத்துக்கும் குழுக்கள், கட்சிகளால் ஈழத் தமிழர்களுக்கு நன்மையோ இல்லையோ ஆனால் தமிழக அரசியலை மூர்க்கத்தை நோக்கி அழிவை நோக்கி அவை இட்டுச் செல்லும் என்பது நிச்சயம். இலங்கையர்கள் மீதான தாக்குதல்கள் நிச்சயம் இரண்டாவது போக்கின்பாற்பட்டவையே. இதை ஏற்பது நிச்சயம் தமிழக அரசியலை வன்முறைப்படுத்திவிடும். எனினும், இதை எதிர்க்கும் வேலைக்கு நாம் கச்சை கட்டத்தேவையில்லை. அரசு இதை அனுமதிக்காது. அரசே இதை எதிர்கொள்ளும்.

  ஆனால், போர் நடந்துகொண்டிருந்தபோதும், அதற்குப் பிறகும் நடந்த வரலாற்றில் பெரிய பயங்கரம் குறித்தோ, படுகொலைகள் குறித்தோ, முள்வேலி முகாம்கள் குறித்தோ எப்போதும் அமைதி காத்தே வந்துள்ள தமிழக அறிவு ஜீவிகள், மனித உரிமையாளர்களுக்கு இந்தப் பிரச்சினையில் ஏற்பட்டுள்ள சத்திய ஆவேசம் மெய் சிலிர்க்க வைக்கிறது.

  இத்தனைக்கும், அரசாங்கமே எதிர்கொண்டுவிடும் தன்மையுள்ள இலங்கையர் மீதான தாக்குதலை இவர்கள் மூச்சுப் பிடித்துக்கொண்டு கண்டிக்கிறார்கள், கண்டிக்காதவர்களையும் கண்டிக்கிறார்கள்.

   வழக்கமாக நடக்கும் குற்றச் செயல்களுக்கு மனித உரிமையாளர்கள் எதிர்வினையாற்றுவதில்லை. அதை போலீஸ் பார்த்துக்கொள்ளும் என்பதும், எல்லாவற்றுக்கும் எதிர்வினையாற்றும் ஆற்றல் மனித உரிமையாளர்களுக்கு இல்லை என்பதுமே காரணம். அரசே, போலீசே ஒரு கட்சியாக நின்று நடத்தும் வன்முறைகளுக்குத்தான் மனித உரிமையாளர்களின் எதிர்வினை தேவைப்படும். ஆனால், அரசே முன்னின்று நடத்திய ஈழப் படுகொலைகளை, தமிழக மீனவர்கள் நடுக்கடலில் கொல்லப்படுவதை தாக்கப்படுவதை எவ்வித சலனமுமற்று பார்த்துக்கொண்டிருந்த, பார்க்கும் அ.மார்க்ஸ் போன்றவர்கள், போலீஸ் மூலம் எதிர்கொள்ளத் தகுந்த சாதாரண வன்செயல்களுக்கு ஆற்றும் எதிர்வினை இவர்களது பெருமைக்கு உகந்ததாக இல்லை. உள்நாட்டில் இவர்கள் மேற்கொள்ளும் மனித உரிமை செயற்பாடுகள் மதிப்புக்குரியவையாக இருந்தபோதிலும், இத்தகைய வழுவல்கள் நிச்சயம் ஏமாற்றத்தையே அளிக்கின்றன.

   அம்னஸ்டி இன்டர்நேஷனல், இந்த இலங்கையர் மீதான தாக்குதலை ஏற்றுக்கொள்கிறீர்களா என்று கேள்வி கேட்டு பதில் கோரி எஸ்.எம்.எஸ். பிரசாரம் மேற்கொள்கிறது. மிகப்பெரிய இனவழிப்பு நடவடிக்கையையும், சின்னஞ்சிறிய வன்முறைத் தாக்குதலையும் ஒன்றுபோல பாவித்து எதிர்வினையாற்றுவதைப் பார்க்கையில் இது அதீத எதிர்வினையாக, ஓவர் ரியாக்ஷனாகவே படுகிறது. இந்த ஓவர் ரியாக்ஷனின் அரசியல் என்ன? 

Thursday, July 26, 2012

பார்வை: தேசியத் தேரும் இனவெறிக் குதிரைகளும்




இன்று தமிழக அரசியலில் தமிழ்த் தேசியம் விவாதப் பொருளாகி இருக்கிறது.

சாதிக் கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி, தமது செல்வாக்கை பெருமளவில் இழந்துள்ள நிலையில் சாதி வெறிக் கட்சியாகி உள்ளது. அந்த வெறியை தமிழ்த் தேசியத்தின் வடிவமாகக் காட்ட முனைகிறது.

ஆவேசமான பேச்சுகள் மூலம் தமிழக அரசியல் களத்துக்கு அறிமுகமான சீமான், மத-மொழிச் சிறுபான்மையினரை எதிரிகளாகச் சித்திரித்து, இனத்தூய்மை பேசும் ஒருவித தமிழ்த் தேசியத்தை திராவிட இயக்கத்தின் எதிர்நிலையில் நிறுவ முயல்கிறார். மதச் சிறுபான்மையினர் எதிர்ப்பு, அதன் வழிப்பட்ட பாசிச வன்செயல்கள் பாஜக-வை இந்திய அரசியலில் முன்னிலைக்குக் கொண்டு சென்றன. அதன் வழி நின்று தமிழ்நாட்டில் மத-மொழிச் சிறுபான்மையினர் மீதான வெறுப்பை வளர்ப்பதற்கான கருத்தியல் அடிப்படையாக தமிழ்த்தேசியத்தை அவர் கையாள்கிறார். ஈழத்தில் இறுதிக் கட்டப் போரின்போது தலையிட்டு இழப்பை தடுக்க முடியாத திமுக மீதான பொது அதிருப்தி, இளைஞர்கள் மத்தியில் செயல்படுவதற்கான உணர்ச்சிபூர்வமான வாய்ப்பையும் இவருக்கு ஏற்படுத்தித் தந்திருக்கிறது.

இடைநிலைச் சாதிகளின் சாதி ஆதிக்கத்தையும், இந்துத்துவத்தையும் தடவிக் கொடுக்கிறது சீமானின் நாம் தமிழர் கட்சி. நீதிக் கட்சியை நிறுவிய மூவரில் ஒருவர் நடேசனார். முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர். எனவே, பிற்காலத்தில் முதலியார்களுக்காக சாதிக் கட்சி தொடங்கிய ஏ.சி.சண்முகம் அதற்கு "புதிய நீதிக் கட்சி" என்று பெயர் வைத்தார். சி.பா. ஆதித்தனார் என்ற நாடார் சமூகத்தைச் சேர்ந்த தலைவர் அந்தக் காலத்தில் நாம் தமிழர் இயக்கத்தைத் தோற்றுவித்தார். இப்போது நாடார் சமூகத்தைச் சேர்ந்தவரான சீமான் தமது அரசியல் கட்சிக்கு அதே பெயரை சூட்டியுள்ளார். இது தற்செயல் அல்ல.

இந் நிலையில், ஏற்கெனவே மிதமாக தமிழ்த் தேசியம் பேசிவந்த
தலித் அமைப்புகளை, தலித் இளைஞர்களை இந்த சாதிவெறிக் கும்பலின் செயல்பாடுகள் திகைத்துப் பின்வாங்க வைத்திருக்கின்றன.
பாமக, நாம் தமிழர் இதனினும் தீவிரமாகப் பேசும் சிறு குழுக்கள்
ஆகியோரை எதிர்கொள்ளும் போக்கில் தலித்தியர்கள், திராவிட இயக்கத்தார், மார்க்சியர்கள் போன்றோர் தமிழத் தேசியத்தை முற்று முழுதாக மறுதலிக்கத் தலைப்படுகிறார்கள்.

தமிழ்த் தேசியத்தை மட்டுமல்லாமல் தேசியம் என்னும் கருத்தியலையே எதிர்க்கும் நிலைக்கு இவர்கள் செல்கிறார்கள். இணைய வெளிகளிலும் பிற விவாதக் களங்களிலும் இந்த நிலை காணக் கிடைக்கிறது.

சாதிய, மதவழிப்பட்ட கலாசார தேசியமாக தமிழ்த் தேசியம் வரும்போது அதை எதிர்ப்பதில் தவறில்லை. ஆனால், அதன் போக்கில் தேசியமே பிற்போக்கானதுதான் என்று மொத்தமாகத் தீர்ப்பெழுதினால் அது அறிவியலுக்குப் புறம்பானதே.

தேசியம் முற்போக்கானதா, அல்லது பிற்போக்கானதா என்பதை ஒரு குறிப்பிட்ட சமூகம் எந்த வரலாற்றுக் கட்டத்தில் இருக்கிறது என்பதைக் கொண்டே சொல்ல முடியும். பொத்தாம்பொதுவாக தேசியம் முற்போக்கானது என்று ஏற்கவோ, பிற்போக்கானது என்று மறுக்கவோ முடியாது. சமூகங்களின் வளர்ச்சிப் போக்கில் தேசியம் என்பது ஒரு கட்டம். அந்தக் கட்டத்தை எட்டாத மக்களுக்கு அது முற்போக்கு, எட்டியபிறகு அதைத் தாண்டிச் செல்லவேண்டிய நிலையில் உள்ள சமூகங்களுக்கு அது பிற்போக்கு.

சிற்றரசுகளாக இருந்த ஐரோப்பாவில் தேசியங்களின் எழுச்சி சில நூற்றாண்டுகள் முன்பு நடந்தது. அவர்கள் அதில் முன்னேற்றத்தையே கண்டார்கள். இப்போது அவர்களின் சமூக, பொருளுற்பத்தி நிலைகள் ஏற்பட்டுள்ள வளர்ச்சி தேசியத்தைத் தாண்டிச் செல்லும் தேவையை அவர்களுக்கு உணர்த்துகின்றன. இப்போது ஐரோப்பியச் சமூகமாக மேலெழுந்து வருகிறார்கள். ஐரோப்பாவுக்கு ஒரே நாணயத்தைக்கூட கட்டமைத்துள்ளார்கள். சிற்றரசுகள் அழிந்து தேசிய அரசுகள் எழுச்சி அடைந்த ஐரோப்பிய உதாரணம், காலனியாதிக்கத்தால் கட்டுண்டுகிடந்த ஆசியச் சமூகங்களில் அப்படியே நிகழவில்லை.

ஆசிய சிற்றரசுகளை ஐரோப்பியர்கள் அடிமைப்படுத்தி பிராந்தியங்களை ஒன்றாக கட்டுக் கட்டி ஆண்டார்கள். வெளியே போகும்போது அப்படியே விட்டுவிட்டுப் போனார்கள். மூன்று நூற்றாண்டுகள் அடிமைத் தளையில் கடந்த நிலையில், சுதந்திர சமூகங்களாக நம்மை எப்படிக் கட்டமைத்துக்கொள்வது என்பதில் நமக்குள்ள குழப்பம். சிற்றரசுக் காலத்துக்குத் திரும்பிச் செல்வதா, அதன் பிறகு நிகழ்ந்திருக்க வேண்டிய தேசிய அமைப்பை கைக்கொள்வதா அல்லது அதையும் தாண்டி, தேசிய ஒருங்கிணைப்பு அமைப்பை (தற்காலத்திய ஐரோப்பிய ஒன்றியம் போல அல்லது சோவியத் ஒன்றியம் போல) மேற்கொள்வதா என்பதே நமக்குள்ள கேள்வி.

இதில் நாம் எந்த இடத்திலும் இல்லை. மேலுமொரு காலனியாதிக்கத்தை ஒத்த அமைப்பை தேசியம் என்ற பெயரால் நம் மீது நாம் திணித்துக்கொண்டிருக்கிறோம். இந்தியா, இலங்கை போன்றதொரு பல் தேசிய அமைப்பு ஐரோப்பிய தேசிய ஒன்றியங்களைப் போல ஒருங்கிணைந்தும் பலம் பொருந்தியும் திழக முடியும்தான். ஆனால், இப்படி தேசிய ஒன்றியங்கள் உருவாக முக்கிய நிபந்தனை சுதந்திரமான தேசியங்கள்-தேசங்கள் இருக்கவேண்டும் என்பதே.

ஆனால், விறகுக் கட்டைப் போல மக்களை பலவந்தமாக ஒரு அமைப்புக்குள் திணித்து, மேலும் மேலும் மையப்படுத்தப்பட்ட அமைப்பால் ஆள முயற்சிப்பது கலவரங்களையும், தேசியங்களுக்கு இடையிலான பகை உணர்ச்சியையும் ஊட்டி மக்களை பின்தங்கிய நிலையிலேயே வைத்திருக்கும். ஐரோப்பிய, அமெரிக்க வல்லரசுகளும், உலகை வெல்லத் துடிக்கும் இந்தியப் பெருமுதலாளிகளும் விரும்புவதும் இதைத்தான்.

அதே நேரம் இன்னொன்றை கவனிக்கவேண்டும். உலகில் முகிழ்த்த தேசியங்கள் எல்லாம் ஒரு மொழியை அது பேசப்படும் ஒரு நிலப்பரப்பை மையமாகக் கொண்டு முகிழ்த்திருக்கலாம். ஆனால், எந்த தேசிய இனமும் ஒற்றை இனக்குழுவை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு முகிழ்த்ததில்லை. வரலாற்று வழியில் இணைந்து வாழும் பல மரபினங்களின் சங்கமமாகவே தேசிய இனங்களும் பிறகு தேசங்களும் இருந்துள்ளன. இந்த அடிப்படையை மறுத்துவி்ட்டு, தமிழ்நாட்டுக்குள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வந்து பூர்விக நிலத்தின் தொடர்பை முற்றாக அறுத்துக்கொண்டு, மொழியை  பகுதியளவோ முழுதாகவோ மறந்து வாழ்ந்துவரும் தெலுங்கர்கள், கன்னடர்கள், உருது பேசும் முஸ்லீம்கள் போன்றவர்களையும் தமிழ்த் தேசியத்தின் அங்கங்களாகப் பார்க்காமல் பகைவர்களாகப் பார்க்கும் பார்வை, அந்த உத்தேசத் தமிழ்த் தேசியத்தின் கணிசமான மக்களை தேசியத்தின் எதிர் நிலையில் நிறுத்தி தேசியம் என்பதை இனவெறியாகக் குறுக்கும். முகிழ்க்கும் தமிழ்த் தேசியத்துக்குப் பகைவர்களைப் பெருக்கும்.

இனத்தூய்மையும், கலாசார தேசியமும் பேசும் இனவெறி, சாதி வெறிக் கும்பல்கள் வெளிப்பார்வைக்கு தேசிய விடுதலையை முன்னெடுப்பதைப் போலத் தோன்றினாலும் அவை உண்மையாகவே தேசியங்கள் எழுச்சி பெறுதலை பின்னோக்கி இழுக்கவே செய்கின்றன. ராமதாஸ், சீமான் போன்ற இத்தகைய நபர்களே இன்றைக்கு தமிழ்த் தேசியத்தை பிரதிநிதிப்படுத்துவதுதான் தமிழ்த் தேசியத்திற்கு நேர்ந்திருக்கிற கேடு.

Tuesday, July 17, 2012

டெசோ: கருணாநிதி அடித்த கரணமும் காரணமும்






தமிழீழ ஆதரவாளர் அமைப்பின் (டெசோ) முதல் மாநாட்டில் ஈழம் கோரித் தீர்மானம் போடமாட்டோம் என்று அறிவித்துள்ளார் அந்த அமைப்பின் தலைவர் கருணாநிதி. ஒரு மாநாட்டில் என்ன தீர்மானம் போடுவோம் அல்லது போடமாட்டோம் என்பதை முன்கூட்டியே அறிவித்துவி்ட்டால், அந்த மாநாட்டில் நடக்கப்போகும் விவாதங்களுக்கும், தீர்மானங்களின் மீது வாக்களிப்பதற்கும் என்ன பொருள்? பேசாமல் "தமிழீழம் கோரி தீர்மானம் போடுவதில்லை" என்பதே எங்கள் முதல் தீர்மானம் என்றுகூட அவர் அறிவித்திருக்கலாம்.

கருணாநிதியின் இந்த அறிவிப்பைவிட பெரிய குட்டிக்கரணமோ, நகைச்சுவையோ இந்த நூற்றாண்டில் இருக்கப் போவதில்லை. இதற்குப் பின்னால் சிதம்பரத்தின் சந்திப்பு துருத்திக்கொண்டு தெரிகிறது. கிடக்கட்டும்.

ஆனால், இந்தக் கூத்தின் பின்னணியில் ஒன்றை கூர்ந்து கவனிக்கவேண்டும். தமிழீழமே தீர்வு என்றும் டெசோவை உயிர்ப்பிக்கப் போவதாகவும் கருணாநிதி கூறியபோது அதைக் கண்டு கொந்தளித்தவர்கள் தமிழீழத்தை எதிர்க்கும் காங்கிரஸோ, பாஜகவோ அல்லது கம்யூனிஸ்டுகளோ அல்ல. தமிழீழக் கோரிக்கைக்கான ஒட்டுமொத்த தமிழக ஏஜெண்டுகளா தங்களை நியமித்துக்கொண்ட சீமான், நெடுமாறன் வகையறாக்களே. கேலி செய்தார்கள்; கிண்டலடித்தார்கள்; கண்டித்தார்கள். கருணாநிதி அறிவிப்பு ஏமாற்று வேலை என்றும் வருணித்தார்கள். இதில் பெரும் கூத்து என்னவென்றால், தேர்தலுக்கு ஒரு வாரம் முன்பு திடீர் ஈழ ஆதரவாளரான ஜெயலலிதாவை "ஈழத்தாய்" என்று வருணித்ததே இந்த கோஷ்டிதான். ஈழ ஆதரவு எங்கிருந்து வந்தாலும், எந்த சூழலில் வந்தாலும் ஏற்றுக்கொள்வது என்கிற தந்திரமே இதற்குக் காரணம் என்றால், கருணாநிதியின் ஆதரவைக் கண்டு மட்டும் இவர்கள் கொந்தளிக்கக் காரணம் என்ன?


இன்னொரு புறம், டெசோவை உயிர்ப்பிக்கும் கருணாநிதியின் முடிவு, புலம் பெயர்ந்தவர்களும், உள்ளூர் இணையப் புரட்சியாளர்களும் இணைய வெளிகளில் கருணாநிதி மீது அநாகரிக வசைகளை அள்ளித் தெளிப்பதற்கான இன்னொரு சந்தர்ப்பமாக ஆகியிருந்தது. இவர்கள் எல்லோரது வசைகளின், விமர்சனங்களின் ஒட்டுமொத்தம் சாரம் இதுதான் "இந்த டெசோவால் ஒன்றும் ஆகாது. கருணாநிதி அரசியல் செய்கிறார். ஏமாற்றுகிறார்" என்பதுதான்.

ஆனால், உண்மையில் தமிழீழ கோரிக்கைக்கு ஒரு உந்துதலை, விசையை டெசோ தந்துவிடும் என்று காங்கிரஸ் பயந்திருக்கிறது, இலங்கை நினைத்திருக்கிறது என்பதற்கான சாட்சியே சிதம்பரத்தின் சந்திப்பு. சீமான் வாயில் ரத்தம் வரும் அளவு கத்தினாலும் கண்டுகொள்ளாத காங்கிரஸ் கருணாநிதி என்னும் முதியவரின் அறிவிப்பை ஏன் சீரியசாகப் பார்க்கவேண்டும்? முதல் காரணம். சீமான் அமைப்பைப் போல திமுக சில்லரை அமைப்பு இல்லை. இரண்டாவது, ஒரு நாள் போராட்டமாக இல்லாமல் அதெற்கென முக்கிய அரசியல் கட்சிகள் இணைந்து அமைப்பொன்றை உருவாக்கினால், சிதறிக்கிடக்கும் தமிழகத் தமிழர்களின் கோபம், கோரிக்கை உருப்பெற அது வழிவகுத்துவிடும் என்பது.

கருணாநிதியின் உள்ளம் தூய உள்ளமா, அவரது இதயம் உண்மையில் ஈழத்துக்காக துடிக்கிறதா என்பது இங்கே கேள்வியில்லை. பருண்மையாக, ஆப்ஜக்டிவாக ஒரு அரசியல் கட்சியின் பலம், அதன் நடவடிக்கை என்னவாக இருக்கிறது என்பதே முக்கியத்துவம் பெறுகிறது. அப்படி பலம் பொருந்திய ஒரு கட்சி, அமைப்பு ரீதியில் ஈழத்துக்கு ஆதரவு திரட்ட ஒரு செயல்திட்டத்தை முன் வைக்கும்போது ஈழ ஆதரவாளர்கள், தமிழ் உணர்வாளர்கள் அதைக் கிண்டலடித்து எதிர்ப் பிரசாரம் செய்தால், அந்த நேரத்தில் அவர் எப்படி காங்கிரசையும் பகைத்துக்கொள்ள முடியும்?

விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அரசியல் எதார்த்தம் என்பது காங்கிரஸ் அல்லது பாஜக என்ற இரு துருவத்தில் பிற கட்சிகள் அணி சேர்வதாக இருக்கிறது. காங்கிரசை விட்டுவிட்டு பாஜக அணியில் கருணாநிதி சேர்வதை விரும்புகிறார்களா இவர்கள்? பாஜக என்ன ஈழ ஆதரவுக் கட்சியா? காங்கிரசைப் பகைத்துக்கொள்வதற்கு கருணாநிதிக்கு தனிப்பட்ட காரணங்களே இருக்கின்றன. ஊழல் குற்றச்சாட்டு பெரிதாக அனுமதித்து திமுக ஆட்சி இழக்க காரணமாக இருந்தது, மகள் கனிமொழியை கைது செய்து சிறைவைத்தது, ராஜாவை சிறை வைத்தது என்பது போல. ஆனாலும் இப்போது அவருக்கு வேறு வழியில்லை. கருணாநிதிகூட கொள்கை மாறுபாடு காரணமாக பாஜக-வுடன் சேர மறுக்கிறவர் அல்ல. கடந்த காலத்தில் சேர்ந்தவர்தானே அவர். ஆனால் இப்போதைய சூழலில் பாஜகவுடன் சேர்வது என்பது சொந்தக் காசில் சூனியம் வைத்துக்கொள்வதாக முடிந்துவிடும். யாருடன் கூட்டணியில் இருந்தாலும் பாஜக என்பது அதிமுகவின் இயற்கைக்கூட்டணி. திமுக- ஆதரவில் ஆட்சியைப் பிடித்தாலும் ஜெயலலிதா மீது பாஜக கரிசனையாகவே நடந்துகொள்ளும். அதே சமயம், காங்கிரஸ்-திமுக அப்படி இயற்கைக்கூட்டணி அல்ல. ஜெயலலிதா உள்ளே நுழைந்து காங்கிரசோடு சேர்ந்துகொண்டால், திமுக தேசிய அநாதையாகிவிடும், பாஜக அதை கூட்டணியில் சேர்த்துக்கொண்டால்கூட.

ஈழத்தில் புலிகள்-அரசுக்கு இடையிலான இறுதிப்போரின்போது கூட இப்படித்தான் நடந்தது. ஈழ நிலவரங்களுக்காக சோனியாவை விமர்சிக்காத ராமதாஸ் கருணாநிதியையே திட்டிக்கொண்டிரு்தார். காங்கிரசிடம் இருந்து திமுகவைப் பிரித்து அந்த இடத்தில் அதிமுகவை அமர்த்துவதே இங்கிருந்த பல கட்சிகளின், மீடியாக்களின் மறைமுகத் திட்டமாக இருந்தது. ஆட்சியில் பங்கு பெற்றிருந்தபோது ஈழ நிலைப்பாட்டுக்காக காங்கிரசை ஒரு வார்த்தை கூட விமர்சித்ததில்லை பாமக. கடைசியாக, 2004 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகும்போதுகூட, சும்மா பெயரளவுக்குக்கூட ஈழத்தைக் காரணமாகக் காட்டவில்லை அந்தக் கட்சி. விலகல் கடிதத்தைக் கொடுத்துவிட்டு வெளியே வந்தபோது "சோனியாவோடு நல்லுறவு நீடிக்கிறது" என அறிவித்தார் அன்புமணி ராமதாஸ்.

சொந்த இனம் சாகும்போது பதவியில் இருந்ததாக கருணாநிதியை 100 வார்த்தை விமர்சிக்கும் எவரும் ராமதாசை ஒரு வார்த்தை கூட திட்டியதாகத் தெரியவில்லை. ஆனால், திருமாவளவனை மட்டும் திட்டுகிறார்கள். காரணம் இப்போது ராமதாஸ் கருணாநிதியோடு இல்லை. திருமாவளவன் இருக்கிறார். அப்படியானால் இவர்களின் குறிக்கோள் ஈழ ஆதரவா இல்லை கருணாநிதி எதிர்ப்பா?

அரசியல் ரீதியில் இடது-மையவாத (Left of Centre) நிலைப்பாடு கொண்ட திமுகவை அழித்து வலதுசாரி அதிமுகவுக்கு போட்டியில்லாத அரசியல் வெளியை உருவாக்குவதுதான் தமிழ்த் தேசிய வாதிகள் என்று தம்மை அழைத்துக் கொள்வோரின் தீவிர முழக்கங்களுக்குப் பின்னால் உள்ள திட்டமோ என்ற ஐயம் வருகிறது. கருணாநிதியின் பல்டிக்கு சற்றும் குறைவில்லாத கேலிக்கூத்து எதுவென்றால், தமிழ் ஈழம் அமைவதையே விரும்பாதவர்கள் மு.க.வின் பல்டி குறித்து வைத்துக்கொண்டிருக்கும் ஒப்பாரிதான்.

அரசியல், வரலாற்று உணர்வு மந்தித்து பிழைப்பு வாதத்தில் மூழ்கிக்கிடக்கும் இளைய தலைமுறை இந்த நுண்ணரசியலைப் புரிந்துகொள்ளாது என்பது காவிகளுக்கும் அவர்களின் தமிழ்த் தேசியக் கூவிகளுக்கும் சாதகமே

Monday, September 5, 2011

திட்டினால் சிரிக்கும் மலர். எச்சரிக்கை.

சி.பா.ஆதித்தனாரை தமிழர் தந்தை என்று சிலர் அழைக்கிறார்கள். அது அவர்களது விருப்பம். இதனை ஏற்கமுடியாதென்றால் மறுப்பவர்கள் தங்கள் மறுப்பை சொல்லலாம், எழுதலாம். ஆனால் "5 கோடி தமிழர்களுக்கு ஒரே தந்தையா" என்று 1980-களில் கேள்வி கேட்டு கொச்சைப்படுத்தியது தினமலர். அந்த காலத்தில் அதற்கு மிகக் குறைந்த சர்குலேஷனே இருந்தது. அப்போது எழுந்த எதிர்ப்பு பிரசாரமே அந்த நாளேட்டை பிரபலப்படுத்தியது. அன்றிலிருந்து இன்றுவரை அருவருப்பாக எழுதி அது விளைவிக்கும் எதிர்ப்பின் வெளிச்சத்திலேயே தினமலர் வளர்ந்து வருகிறது.  தினகரன் பத்திரிகையை 2005ல் சன் குழுமம் வாங்கிய பிறகு அதன் சர்குலேஷன் பெரும் வளர்ச்சி கண்டது. தினமலர் சர்குலேஷன் பெருத்த அடிவாங்கி அது மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்து. தினமலர் பாணி இதழியல் மீது இருந்த பொது வெறுப்பாலும், பாமக, அரசு ஊழியர்கள் எடுத்த தீவிர புறக்கணிப்பு நிலையாலும், அதைவிட சர்குலேஷன் குறைந்த தினமணியைவிட சமூக முக்கியத்துவம் குன்றி, கவனிப்பாரற்ற நிலைக்குத் தள்ளப்பட்டது தினமலர்.

இந்நிலையில் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் உற்சாகமான தினமலர் மீண்டும் தமது விருப்பங்களை செய்திகளாக, அதுவும் அருவருக்கத் தக்க முறையில் அவதூறாகவும் எழுதி வருவதாக அறிகிறேன். இதனால், அதற்கு இரண்டு நன்மை. தன் கருத்தியலை எழுதியதாகவும் ஆகும், அந்த எழுத்தின் பரபரப்பில் விளம்பரமும் கிடைக்கும். அப்படித்தான் அது வளர்ந்தது.  யாராவது என்னைய அடிங்கடா என்று அலறுகிறது தினமலர். உங்கள் எதிர்ப்பும், வசையும் அல்வா மாதிரி அதற்கு இனிக்கும்.  புறக்கணிப்புதான் சரியான தண்டனை என்பதை உணராத தமிழர்களே திட்டுங்க.... திட்டுங்க திட்டிக்கிட்டே இருங்க.

ஆனால் ஒன்று,
குஜராத்தி மொழியில் வெளியாகும் இரண்டு மதவெறி நாளேடுகளான . சந்தேஷ், குஜராத் சமாச்சார் ஆகியவைதான் குஜராத் பற்றி எறிந்ததற்கும் மக்களே மதம் பிடித்து அலைவதற்கும் காரணம். அப்போதும் தமிழகத்தில் அவற்றுக்கு இணையான திட்டமும் வெறியும் மிகுந்த தினமலர் இருந்தது. ஆனால், அதன் அவதூறுகள் தமிழகத்தில் பொதுக் கருத்தை உருவாக்கவில்லை. காரணம், ஒரே பத்திரிகையால், அது எவ்வளவு பெரியதாக இருந்தாலும் பொதுக் கருத்தை உருவாக்கிவிடமுடியாது. தினமலர் ஒன்றை பேசினால், தினத்தந்தி, தினமணி போன்றவை அதனை மறுதலிக்கும் வாய்ப்பு இருந்ததே தினமலரின் சமூகத் தாக்கம் முழுமை அடையாததற்குக் காரணம். இரண்டு பத்திரிகைகள் ஒரு கருத்தியலில் இயங்கினால்தான் ஒன்றின் செய்தி மற்றொன்றை நியாயப்படுத்தி, ருசுப்பித்து பொய்யை பொதுக்கருத்தாக ஆக்க முடியும்.

ஆனால், ஒரு காலத்தி்ல் இருந்ததைப் போல தற்போது தினமலர் தனித்து இல்லை. அதற்கு ஒரு மிதவாத சாதிவெறி, மதவறிக்கூட்டணி "மணி"யாக உருவாகி வருகிறது. உணர்ச்சிவசப்படுவதைவிட உத்தியும் தந்திரமுமே முக்கியம். இப்போது தினமலரை எப்படி எதிர்கொள்வது என்பதில் உணர்ச்சிவசப்பட்டு தவறிழைத்துவிட்டால், தமிழகத்தின் முகத்தில் பெரியார் எழுதிய மானமும் அறிவும் காணாமல் போகும். எச்சரிக்கை.