Friday, February 25, 2011

ஒட்டும் தேமுதிக, முறியும் காங்கிரஸ், சிரிக்கும் திமுக

அதிமுக -வுடன் தேமுதிக உறவு வலுவடைவதும், பலவீனப்பட்டுள்ள காங்கிரஸ்-திமுக கூட்டணி முறியும் சாத்தியம் அதிகமாவதும் திமுக-வுக்கு பலவீனம் போல வெளிப்பார்வைக்குத் தோன்றினாலும், இந்த இரண்டு காரணிகளும் சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெறுவதற்கு சாதகமான வானிலையையே தோற்றுவிக்கின்றன. இது விநோதம்தான் ஆனாலும் உண்மை.

  காங்கிரஸ் கையாலேயே பச்சைக் கொடி காட்டவைத்து எதிர்பார்ப்புக்கு மாறாக பழைய தகுதியுடன் 31 இடம் கொடுத்து பாமக-வை கூட்டணிக்குள்  இழுத்துக்கொண்டது திமுக-வின் உத்தி. காங்கிரசை நெருக்கடிக்குள்ளாக்கும் வியூகத்தின் முதல் படி அது. இதனால் திமுக-வுக்கு இரண்டு சாதகங்கள். ஒன்று, இருப்பது இவ்வளவுதான் இதில் எவ்வளவு கொடுக்கமுடியும் என்று காங்கிரசிடம் கேட்கமுடியும், இன்னொன்று, நீங்கள் வெளியே போனாலும் எங்களால் சமாளித்துக்கொள்ளமுடியும் என்ற தன்னம்பிக்கை நிலையை காங்கிரஸ் பேச்சுவார்த்தைக்கு முன்பாகவே ஈட்டிக்கொள்ளமுடியும்.
      இதற்குப் பிறகு காங்கிரசுக்கு உள்ள சாத்தியங்கள் மூன்று: திமுக தரும் இடங்களைப் பெற்றுக்கொள்வது அல்லது தேமுதிக-வுடன் கூட்டு சேர்ந்து தனி அணியாகப் போட்டியிடுவது அல்லது அதிமுக-கூட்டணியில் இணைவது. தற்போது தேமுதிக அதிமுக கூட்டணியில் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ள நிலையில், அந்தக்கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், கடைசி இரண்டு சாத்தியங்களும் அடிபட்டுவிட்டன. அதாவது தேமுதிக-வுடன் தனி அணி காண்பதும் இயலாது, அதிமுக கூட்டணியில் நுழைவதற்கும் போதிய இடம் இருக்கப்போவதில்லை. அதிகாரபூர்வமாக அதிமுக-தேமுதிக கூட்டணி முடிவாகும் நிலையில், காங்கிரசை கூட்டணியில் வைத்துக்கொள்வதா வேண்டாமா அல்லது எத்தனை இடங்கள் தருவது என்பதைத் தீர்மானிக்கும் சர்வ வல்லமையும் திமுக-வுக்கு வந்துவிடும்.
     காங்கிரசை திமுக கழற்றிவிடும்பட்சத்தில் அதற்கு தனியாக நிற்பதைத் தவிர போக்கிடம் இல்லை. தனித்துவிடப்பட்ட பாஜக-வுக்கு ஒரு பேச்சுத்துணை அவ்வளவே. அதே நேரத்தில் வெட்டியாக வாக்கு வங்கி இல்லாத காங்கிரசுக்குத் தரவேண்டிய குறைந்தது 60 இடங்கள் திமுக-வுக்கு மிஞ்சும், இதனால் அதிகமான இடங்களில் போட்டியிட்டு தனிப் பெரும்பான்மைக்கான வாய்ப்புகளை திமுக அதிகரித்துக்கொள்ளும். இரண்டாவது, தேமுதிக என்னும் அனுபவமற்ற தலைவர்களை பக்குவமற்ற தொண்டர்களைக் கொண்ட பலவீனமான கட்சி சுமார் 40 இடங்களைப் பெற்றாலும்கூட அவை திமுக-வுக்கு சுலப வெற்றிக்கான வாய்ப்பாக மாறிவிடும். ஒருவேளை காங்கிரஸ் அதிமுக கூட்டணியில் நுழையும் பட்சத்தில் யானை புகுந்த வெண்கலக் கடையாக அதிமுக முகாமில் கடும் சத்தமும் சலசலப்பும் தோன்றும். மொத்த இட ஒதுக்கீடுகளையும் மறுவரையறை செய்யவேண்டியது வரும். பழைய கூட்டணிக் கட்சிகள் குறிப்பாக கம்யூனிஸ்டுகள் வெளியேறலாம், ஒருவேளை காங்கிரஸ் இல்லாத திமுக-வுடன் கூட்டணிக்கே வந்தாலும் வரலாம். மதிமுக-வுக்கு தார்மீக (!?) நெருக்கடி தோன்றலாம்.
          தம்மளவிலேயே பலமாக உள்ள வடக்கு மாவட்டங்களில் விடுதலைச் சிறுத்தைகள், பாமக- துணையோடு தேர்தலை எதிர்கொள்ளும் திமுக, அந்த மண்டலத்தில் (சென்னை நீங்கலாக) கிட்டத்தட்ட எல்லாத் தொகுதிகளிலும் வெற்றியை உறுதி செய்துகொள்ளும். தென் மாவட்டங்களில் வழக்கமான தேவர் அரசியலுக்கு எதிரான தலித், நாடார் வாக்குகள் உறுதி செய்யப்பட்டால், அங்கும் திமுக-வுக்குப் பெரும் சவால்கள் இருக்காது. அந்த நிலையிலும் திமுக-வின் கவலை ரேகை சென்னை,  டெல்டா மாவட்டங்கள், கொங்கு மண்டலம், கடலோர மாவட்டங்கள் ஆகிய பகுதிகளில் விரவியிருக்கும். ஆனால், இந்தப் பகுதிகளில் 30-40 சதவீத இடங்களில் வென்றாலும் ஆட்சியமைப்பதற்குப் போதுமான இடங்கள் கிடைத்துவிடும்.
எப்படிப்பார்த்தாலும், காங்கிரஸ் போடும் கணக்கு தப்புக்கணக்காகப் போவதற்கே சாத்தியங்கள் அதிகம். காத்திருப்போம் காட்சிகள் விரியும், கணிப்புகளைவிட யதார்த்தம் சுவாரசியமானது.