Thursday, July 26, 2012

பார்வை: தேசியத் தேரும் இனவெறிக் குதிரைகளும்




இன்று தமிழக அரசியலில் தமிழ்த் தேசியம் விவாதப் பொருளாகி இருக்கிறது.

சாதிக் கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி, தமது செல்வாக்கை பெருமளவில் இழந்துள்ள நிலையில் சாதி வெறிக் கட்சியாகி உள்ளது. அந்த வெறியை தமிழ்த் தேசியத்தின் வடிவமாகக் காட்ட முனைகிறது.

ஆவேசமான பேச்சுகள் மூலம் தமிழக அரசியல் களத்துக்கு அறிமுகமான சீமான், மத-மொழிச் சிறுபான்மையினரை எதிரிகளாகச் சித்திரித்து, இனத்தூய்மை பேசும் ஒருவித தமிழ்த் தேசியத்தை திராவிட இயக்கத்தின் எதிர்நிலையில் நிறுவ முயல்கிறார். மதச் சிறுபான்மையினர் எதிர்ப்பு, அதன் வழிப்பட்ட பாசிச வன்செயல்கள் பாஜக-வை இந்திய அரசியலில் முன்னிலைக்குக் கொண்டு சென்றன. அதன் வழி நின்று தமிழ்நாட்டில் மத-மொழிச் சிறுபான்மையினர் மீதான வெறுப்பை வளர்ப்பதற்கான கருத்தியல் அடிப்படையாக தமிழ்த்தேசியத்தை அவர் கையாள்கிறார். ஈழத்தில் இறுதிக் கட்டப் போரின்போது தலையிட்டு இழப்பை தடுக்க முடியாத திமுக மீதான பொது அதிருப்தி, இளைஞர்கள் மத்தியில் செயல்படுவதற்கான உணர்ச்சிபூர்வமான வாய்ப்பையும் இவருக்கு ஏற்படுத்தித் தந்திருக்கிறது.

இடைநிலைச் சாதிகளின் சாதி ஆதிக்கத்தையும், இந்துத்துவத்தையும் தடவிக் கொடுக்கிறது சீமானின் நாம் தமிழர் கட்சி. நீதிக் கட்சியை நிறுவிய மூவரில் ஒருவர் நடேசனார். முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர். எனவே, பிற்காலத்தில் முதலியார்களுக்காக சாதிக் கட்சி தொடங்கிய ஏ.சி.சண்முகம் அதற்கு "புதிய நீதிக் கட்சி" என்று பெயர் வைத்தார். சி.பா. ஆதித்தனார் என்ற நாடார் சமூகத்தைச் சேர்ந்த தலைவர் அந்தக் காலத்தில் நாம் தமிழர் இயக்கத்தைத் தோற்றுவித்தார். இப்போது நாடார் சமூகத்தைச் சேர்ந்தவரான சீமான் தமது அரசியல் கட்சிக்கு அதே பெயரை சூட்டியுள்ளார். இது தற்செயல் அல்ல.

இந் நிலையில், ஏற்கெனவே மிதமாக தமிழ்த் தேசியம் பேசிவந்த
தலித் அமைப்புகளை, தலித் இளைஞர்களை இந்த சாதிவெறிக் கும்பலின் செயல்பாடுகள் திகைத்துப் பின்வாங்க வைத்திருக்கின்றன.
பாமக, நாம் தமிழர் இதனினும் தீவிரமாகப் பேசும் சிறு குழுக்கள்
ஆகியோரை எதிர்கொள்ளும் போக்கில் தலித்தியர்கள், திராவிட இயக்கத்தார், மார்க்சியர்கள் போன்றோர் தமிழத் தேசியத்தை முற்று முழுதாக மறுதலிக்கத் தலைப்படுகிறார்கள்.

தமிழ்த் தேசியத்தை மட்டுமல்லாமல் தேசியம் என்னும் கருத்தியலையே எதிர்க்கும் நிலைக்கு இவர்கள் செல்கிறார்கள். இணைய வெளிகளிலும் பிற விவாதக் களங்களிலும் இந்த நிலை காணக் கிடைக்கிறது.

சாதிய, மதவழிப்பட்ட கலாசார தேசியமாக தமிழ்த் தேசியம் வரும்போது அதை எதிர்ப்பதில் தவறில்லை. ஆனால், அதன் போக்கில் தேசியமே பிற்போக்கானதுதான் என்று மொத்தமாகத் தீர்ப்பெழுதினால் அது அறிவியலுக்குப் புறம்பானதே.

தேசியம் முற்போக்கானதா, அல்லது பிற்போக்கானதா என்பதை ஒரு குறிப்பிட்ட சமூகம் எந்த வரலாற்றுக் கட்டத்தில் இருக்கிறது என்பதைக் கொண்டே சொல்ல முடியும். பொத்தாம்பொதுவாக தேசியம் முற்போக்கானது என்று ஏற்கவோ, பிற்போக்கானது என்று மறுக்கவோ முடியாது. சமூகங்களின் வளர்ச்சிப் போக்கில் தேசியம் என்பது ஒரு கட்டம். அந்தக் கட்டத்தை எட்டாத மக்களுக்கு அது முற்போக்கு, எட்டியபிறகு அதைத் தாண்டிச் செல்லவேண்டிய நிலையில் உள்ள சமூகங்களுக்கு அது பிற்போக்கு.

சிற்றரசுகளாக இருந்த ஐரோப்பாவில் தேசியங்களின் எழுச்சி சில நூற்றாண்டுகள் முன்பு நடந்தது. அவர்கள் அதில் முன்னேற்றத்தையே கண்டார்கள். இப்போது அவர்களின் சமூக, பொருளுற்பத்தி நிலைகள் ஏற்பட்டுள்ள வளர்ச்சி தேசியத்தைத் தாண்டிச் செல்லும் தேவையை அவர்களுக்கு உணர்த்துகின்றன. இப்போது ஐரோப்பியச் சமூகமாக மேலெழுந்து வருகிறார்கள். ஐரோப்பாவுக்கு ஒரே நாணயத்தைக்கூட கட்டமைத்துள்ளார்கள். சிற்றரசுகள் அழிந்து தேசிய அரசுகள் எழுச்சி அடைந்த ஐரோப்பிய உதாரணம், காலனியாதிக்கத்தால் கட்டுண்டுகிடந்த ஆசியச் சமூகங்களில் அப்படியே நிகழவில்லை.

ஆசிய சிற்றரசுகளை ஐரோப்பியர்கள் அடிமைப்படுத்தி பிராந்தியங்களை ஒன்றாக கட்டுக் கட்டி ஆண்டார்கள். வெளியே போகும்போது அப்படியே விட்டுவிட்டுப் போனார்கள். மூன்று நூற்றாண்டுகள் அடிமைத் தளையில் கடந்த நிலையில், சுதந்திர சமூகங்களாக நம்மை எப்படிக் கட்டமைத்துக்கொள்வது என்பதில் நமக்குள்ள குழப்பம். சிற்றரசுக் காலத்துக்குத் திரும்பிச் செல்வதா, அதன் பிறகு நிகழ்ந்திருக்க வேண்டிய தேசிய அமைப்பை கைக்கொள்வதா அல்லது அதையும் தாண்டி, தேசிய ஒருங்கிணைப்பு அமைப்பை (தற்காலத்திய ஐரோப்பிய ஒன்றியம் போல அல்லது சோவியத் ஒன்றியம் போல) மேற்கொள்வதா என்பதே நமக்குள்ள கேள்வி.

இதில் நாம் எந்த இடத்திலும் இல்லை. மேலுமொரு காலனியாதிக்கத்தை ஒத்த அமைப்பை தேசியம் என்ற பெயரால் நம் மீது நாம் திணித்துக்கொண்டிருக்கிறோம். இந்தியா, இலங்கை போன்றதொரு பல் தேசிய அமைப்பு ஐரோப்பிய தேசிய ஒன்றியங்களைப் போல ஒருங்கிணைந்தும் பலம் பொருந்தியும் திழக முடியும்தான். ஆனால், இப்படி தேசிய ஒன்றியங்கள் உருவாக முக்கிய நிபந்தனை சுதந்திரமான தேசியங்கள்-தேசங்கள் இருக்கவேண்டும் என்பதே.

ஆனால், விறகுக் கட்டைப் போல மக்களை பலவந்தமாக ஒரு அமைப்புக்குள் திணித்து, மேலும் மேலும் மையப்படுத்தப்பட்ட அமைப்பால் ஆள முயற்சிப்பது கலவரங்களையும், தேசியங்களுக்கு இடையிலான பகை உணர்ச்சியையும் ஊட்டி மக்களை பின்தங்கிய நிலையிலேயே வைத்திருக்கும். ஐரோப்பிய, அமெரிக்க வல்லரசுகளும், உலகை வெல்லத் துடிக்கும் இந்தியப் பெருமுதலாளிகளும் விரும்புவதும் இதைத்தான்.

அதே நேரம் இன்னொன்றை கவனிக்கவேண்டும். உலகில் முகிழ்த்த தேசியங்கள் எல்லாம் ஒரு மொழியை அது பேசப்படும் ஒரு நிலப்பரப்பை மையமாகக் கொண்டு முகிழ்த்திருக்கலாம். ஆனால், எந்த தேசிய இனமும் ஒற்றை இனக்குழுவை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு முகிழ்த்ததில்லை. வரலாற்று வழியில் இணைந்து வாழும் பல மரபினங்களின் சங்கமமாகவே தேசிய இனங்களும் பிறகு தேசங்களும் இருந்துள்ளன. இந்த அடிப்படையை மறுத்துவி்ட்டு, தமிழ்நாட்டுக்குள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வந்து பூர்விக நிலத்தின் தொடர்பை முற்றாக அறுத்துக்கொண்டு, மொழியை  பகுதியளவோ முழுதாகவோ மறந்து வாழ்ந்துவரும் தெலுங்கர்கள், கன்னடர்கள், உருது பேசும் முஸ்லீம்கள் போன்றவர்களையும் தமிழ்த் தேசியத்தின் அங்கங்களாகப் பார்க்காமல் பகைவர்களாகப் பார்க்கும் பார்வை, அந்த உத்தேசத் தமிழ்த் தேசியத்தின் கணிசமான மக்களை தேசியத்தின் எதிர் நிலையில் நிறுத்தி தேசியம் என்பதை இனவெறியாகக் குறுக்கும். முகிழ்க்கும் தமிழ்த் தேசியத்துக்குப் பகைவர்களைப் பெருக்கும்.

இனத்தூய்மையும், கலாசார தேசியமும் பேசும் இனவெறி, சாதி வெறிக் கும்பல்கள் வெளிப்பார்வைக்கு தேசிய விடுதலையை முன்னெடுப்பதைப் போலத் தோன்றினாலும் அவை உண்மையாகவே தேசியங்கள் எழுச்சி பெறுதலை பின்னோக்கி இழுக்கவே செய்கின்றன. ராமதாஸ், சீமான் போன்ற இத்தகைய நபர்களே இன்றைக்கு தமிழ்த் தேசியத்தை பிரதிநிதிப்படுத்துவதுதான் தமிழ்த் தேசியத்திற்கு நேர்ந்திருக்கிற கேடு.

Tuesday, July 17, 2012

டெசோ: கருணாநிதி அடித்த கரணமும் காரணமும்






தமிழீழ ஆதரவாளர் அமைப்பின் (டெசோ) முதல் மாநாட்டில் ஈழம் கோரித் தீர்மானம் போடமாட்டோம் என்று அறிவித்துள்ளார் அந்த அமைப்பின் தலைவர் கருணாநிதி. ஒரு மாநாட்டில் என்ன தீர்மானம் போடுவோம் அல்லது போடமாட்டோம் என்பதை முன்கூட்டியே அறிவித்துவி்ட்டால், அந்த மாநாட்டில் நடக்கப்போகும் விவாதங்களுக்கும், தீர்மானங்களின் மீது வாக்களிப்பதற்கும் என்ன பொருள்? பேசாமல் "தமிழீழம் கோரி தீர்மானம் போடுவதில்லை" என்பதே எங்கள் முதல் தீர்மானம் என்றுகூட அவர் அறிவித்திருக்கலாம்.

கருணாநிதியின் இந்த அறிவிப்பைவிட பெரிய குட்டிக்கரணமோ, நகைச்சுவையோ இந்த நூற்றாண்டில் இருக்கப் போவதில்லை. இதற்குப் பின்னால் சிதம்பரத்தின் சந்திப்பு துருத்திக்கொண்டு தெரிகிறது. கிடக்கட்டும்.

ஆனால், இந்தக் கூத்தின் பின்னணியில் ஒன்றை கூர்ந்து கவனிக்கவேண்டும். தமிழீழமே தீர்வு என்றும் டெசோவை உயிர்ப்பிக்கப் போவதாகவும் கருணாநிதி கூறியபோது அதைக் கண்டு கொந்தளித்தவர்கள் தமிழீழத்தை எதிர்க்கும் காங்கிரஸோ, பாஜகவோ அல்லது கம்யூனிஸ்டுகளோ அல்ல. தமிழீழக் கோரிக்கைக்கான ஒட்டுமொத்த தமிழக ஏஜெண்டுகளா தங்களை நியமித்துக்கொண்ட சீமான், நெடுமாறன் வகையறாக்களே. கேலி செய்தார்கள்; கிண்டலடித்தார்கள்; கண்டித்தார்கள். கருணாநிதி அறிவிப்பு ஏமாற்று வேலை என்றும் வருணித்தார்கள். இதில் பெரும் கூத்து என்னவென்றால், தேர்தலுக்கு ஒரு வாரம் முன்பு திடீர் ஈழ ஆதரவாளரான ஜெயலலிதாவை "ஈழத்தாய்" என்று வருணித்ததே இந்த கோஷ்டிதான். ஈழ ஆதரவு எங்கிருந்து வந்தாலும், எந்த சூழலில் வந்தாலும் ஏற்றுக்கொள்வது என்கிற தந்திரமே இதற்குக் காரணம் என்றால், கருணாநிதியின் ஆதரவைக் கண்டு மட்டும் இவர்கள் கொந்தளிக்கக் காரணம் என்ன?


இன்னொரு புறம், டெசோவை உயிர்ப்பிக்கும் கருணாநிதியின் முடிவு, புலம் பெயர்ந்தவர்களும், உள்ளூர் இணையப் புரட்சியாளர்களும் இணைய வெளிகளில் கருணாநிதி மீது அநாகரிக வசைகளை அள்ளித் தெளிப்பதற்கான இன்னொரு சந்தர்ப்பமாக ஆகியிருந்தது. இவர்கள் எல்லோரது வசைகளின், விமர்சனங்களின் ஒட்டுமொத்தம் சாரம் இதுதான் "இந்த டெசோவால் ஒன்றும் ஆகாது. கருணாநிதி அரசியல் செய்கிறார். ஏமாற்றுகிறார்" என்பதுதான்.

ஆனால், உண்மையில் தமிழீழ கோரிக்கைக்கு ஒரு உந்துதலை, விசையை டெசோ தந்துவிடும் என்று காங்கிரஸ் பயந்திருக்கிறது, இலங்கை நினைத்திருக்கிறது என்பதற்கான சாட்சியே சிதம்பரத்தின் சந்திப்பு. சீமான் வாயில் ரத்தம் வரும் அளவு கத்தினாலும் கண்டுகொள்ளாத காங்கிரஸ் கருணாநிதி என்னும் முதியவரின் அறிவிப்பை ஏன் சீரியசாகப் பார்க்கவேண்டும்? முதல் காரணம். சீமான் அமைப்பைப் போல திமுக சில்லரை அமைப்பு இல்லை. இரண்டாவது, ஒரு நாள் போராட்டமாக இல்லாமல் அதெற்கென முக்கிய அரசியல் கட்சிகள் இணைந்து அமைப்பொன்றை உருவாக்கினால், சிதறிக்கிடக்கும் தமிழகத் தமிழர்களின் கோபம், கோரிக்கை உருப்பெற அது வழிவகுத்துவிடும் என்பது.

கருணாநிதியின் உள்ளம் தூய உள்ளமா, அவரது இதயம் உண்மையில் ஈழத்துக்காக துடிக்கிறதா என்பது இங்கே கேள்வியில்லை. பருண்மையாக, ஆப்ஜக்டிவாக ஒரு அரசியல் கட்சியின் பலம், அதன் நடவடிக்கை என்னவாக இருக்கிறது என்பதே முக்கியத்துவம் பெறுகிறது. அப்படி பலம் பொருந்திய ஒரு கட்சி, அமைப்பு ரீதியில் ஈழத்துக்கு ஆதரவு திரட்ட ஒரு செயல்திட்டத்தை முன் வைக்கும்போது ஈழ ஆதரவாளர்கள், தமிழ் உணர்வாளர்கள் அதைக் கிண்டலடித்து எதிர்ப் பிரசாரம் செய்தால், அந்த நேரத்தில் அவர் எப்படி காங்கிரசையும் பகைத்துக்கொள்ள முடியும்?

விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அரசியல் எதார்த்தம் என்பது காங்கிரஸ் அல்லது பாஜக என்ற இரு துருவத்தில் பிற கட்சிகள் அணி சேர்வதாக இருக்கிறது. காங்கிரசை விட்டுவிட்டு பாஜக அணியில் கருணாநிதி சேர்வதை விரும்புகிறார்களா இவர்கள்? பாஜக என்ன ஈழ ஆதரவுக் கட்சியா? காங்கிரசைப் பகைத்துக்கொள்வதற்கு கருணாநிதிக்கு தனிப்பட்ட காரணங்களே இருக்கின்றன. ஊழல் குற்றச்சாட்டு பெரிதாக அனுமதித்து திமுக ஆட்சி இழக்க காரணமாக இருந்தது, மகள் கனிமொழியை கைது செய்து சிறைவைத்தது, ராஜாவை சிறை வைத்தது என்பது போல. ஆனாலும் இப்போது அவருக்கு வேறு வழியில்லை. கருணாநிதிகூட கொள்கை மாறுபாடு காரணமாக பாஜக-வுடன் சேர மறுக்கிறவர் அல்ல. கடந்த காலத்தில் சேர்ந்தவர்தானே அவர். ஆனால் இப்போதைய சூழலில் பாஜகவுடன் சேர்வது என்பது சொந்தக் காசில் சூனியம் வைத்துக்கொள்வதாக முடிந்துவிடும். யாருடன் கூட்டணியில் இருந்தாலும் பாஜக என்பது அதிமுகவின் இயற்கைக்கூட்டணி. திமுக- ஆதரவில் ஆட்சியைப் பிடித்தாலும் ஜெயலலிதா மீது பாஜக கரிசனையாகவே நடந்துகொள்ளும். அதே சமயம், காங்கிரஸ்-திமுக அப்படி இயற்கைக்கூட்டணி அல்ல. ஜெயலலிதா உள்ளே நுழைந்து காங்கிரசோடு சேர்ந்துகொண்டால், திமுக தேசிய அநாதையாகிவிடும், பாஜக அதை கூட்டணியில் சேர்த்துக்கொண்டால்கூட.

ஈழத்தில் புலிகள்-அரசுக்கு இடையிலான இறுதிப்போரின்போது கூட இப்படித்தான் நடந்தது. ஈழ நிலவரங்களுக்காக சோனியாவை விமர்சிக்காத ராமதாஸ் கருணாநிதியையே திட்டிக்கொண்டிரு்தார். காங்கிரசிடம் இருந்து திமுகவைப் பிரித்து அந்த இடத்தில் அதிமுகவை அமர்த்துவதே இங்கிருந்த பல கட்சிகளின், மீடியாக்களின் மறைமுகத் திட்டமாக இருந்தது. ஆட்சியில் பங்கு பெற்றிருந்தபோது ஈழ நிலைப்பாட்டுக்காக காங்கிரசை ஒரு வார்த்தை கூட விமர்சித்ததில்லை பாமக. கடைசியாக, 2004 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகும்போதுகூட, சும்மா பெயரளவுக்குக்கூட ஈழத்தைக் காரணமாகக் காட்டவில்லை அந்தக் கட்சி. விலகல் கடிதத்தைக் கொடுத்துவிட்டு வெளியே வந்தபோது "சோனியாவோடு நல்லுறவு நீடிக்கிறது" என அறிவித்தார் அன்புமணி ராமதாஸ்.

சொந்த இனம் சாகும்போது பதவியில் இருந்ததாக கருணாநிதியை 100 வார்த்தை விமர்சிக்கும் எவரும் ராமதாசை ஒரு வார்த்தை கூட திட்டியதாகத் தெரியவில்லை. ஆனால், திருமாவளவனை மட்டும் திட்டுகிறார்கள். காரணம் இப்போது ராமதாஸ் கருணாநிதியோடு இல்லை. திருமாவளவன் இருக்கிறார். அப்படியானால் இவர்களின் குறிக்கோள் ஈழ ஆதரவா இல்லை கருணாநிதி எதிர்ப்பா?

அரசியல் ரீதியில் இடது-மையவாத (Left of Centre) நிலைப்பாடு கொண்ட திமுகவை அழித்து வலதுசாரி அதிமுகவுக்கு போட்டியில்லாத அரசியல் வெளியை உருவாக்குவதுதான் தமிழ்த் தேசிய வாதிகள் என்று தம்மை அழைத்துக் கொள்வோரின் தீவிர முழக்கங்களுக்குப் பின்னால் உள்ள திட்டமோ என்ற ஐயம் வருகிறது. கருணாநிதியின் பல்டிக்கு சற்றும் குறைவில்லாத கேலிக்கூத்து எதுவென்றால், தமிழ் ஈழம் அமைவதையே விரும்பாதவர்கள் மு.க.வின் பல்டி குறித்து வைத்துக்கொண்டிருக்கும் ஒப்பாரிதான்.

அரசியல், வரலாற்று உணர்வு மந்தித்து பிழைப்பு வாதத்தில் மூழ்கிக்கிடக்கும் இளைய தலைமுறை இந்த நுண்ணரசியலைப் புரிந்துகொள்ளாது என்பது காவிகளுக்கும் அவர்களின் தமிழ்த் தேசியக் கூவிகளுக்கும் சாதகமே